dark_mode
Image
  • Thursday, 14 August 2025

பல துறைகளில் விலைமதிப்பற்ற பங்களிப்பு; இந்தியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு அயர்லாந்து அதிபர் கண்டிப்பு

பல துறைகளில் விலைமதிப்பற்ற பங்களிப்பு; இந்தியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு அயர்லாந்து அதிபர் கண்டிப்பு

டப்ளினின்: அயர்லாந்தில் இந்திய சமூகத்தினர் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அந்நாட்டு அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அயர்லாந்தில், கடந்த சில வாரங்களில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பல கடுமையான தாக்குதல்கள் நடந்து உள்ளன. ஜூலை 19ம் தேதி இந்தியாவைச் சேர்ந்த 40 வயதான அமேசான் ஊழியர் ஒருவர், டப்ளினின் டல்லாஹ்ட்டில் ஒரு டீனேஜ் கும்பலால் தாக்கப்பட்டார். இதை தொடர்ந்து, 32 வயதான சந்தோஷ் யாதவ் டப்ளின் அபார்ட்மெண்டிற்கு அருகில் ஆறு இளைஞர்களால் தாக்கப்பட்டார், இதனால் அவருக்கு கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி, ஆறு வயது இந்திய சிறுமியை அந்நாட்டை விட்டு வெளியேறும்படி சிறுவர் கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஜூலை மாதத்தில் மட்டும் 3 இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல்களை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸ் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய சமூகம் அயர்லாந்தின் மருத்துவம், செவிலியர், பராமரிப்பு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தொழில்முனைவு போன்ற பல துறைகளுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளது. இந்திய சமூகத்தினர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் அயர்லாந்தின் மதிப்புகளுக்கு முரணானவை.

இந்த தாக்குதல் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. இது போன்ற செயல்கள் முழு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அயர்லாந்து, அனைத்து சமூகங்களும் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அயர்லாந்தில் இந்தியர்கள் தாக்கப்படுவதை கருத்தில் கொண்ட அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம், ஆலோசனைகளை வழங்கி, அவசர உதவி எண்களைப் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

related_post