10 மாவட்டங்களில் இன்று கனமழை: கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'

சென்னை: தமிழகத்தில் இன்று, 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதில், கோவை, நீலகிரி மாவட்டங்களில், மிக கனமழை பெய்யும் என்பதால், 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா அலுவலகம் பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
அடுத்தபடியாக, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தலா, 7; திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பூண்டி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா, 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்மாநிலங்களின் மீது, ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மீது, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும், 24 வரை மிதமான மழை தொடரும். கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.