dark_mode
Image
  • Sunday, 09 March 2025

சென்னை அசோக் நகரில் பேருந்து நிழற்குடை நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் உணவகம்

சென்னை அசோக் நகரில் பேருந்து நிழற்குடை நடைபாதையை ஆக்கிரமித்து செயல்படும் உணவகம்

 

அசோக் நகர் 11-வது நிழற்சாலையில் பேருந்து நிழற்குடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து உணவகம் நடத்துவதால் பயணிகளும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் அவதிக்குள்ளாவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அசோக்நகரை சேர்ந்த வாசகர் ஒருவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பிரத்தியேக ‘உங்கள் குரல்’ தொலைபேசி புகார் சேவை எண்ணை தொடர்புகொண்டு தெரிவித்ததாவது:

 

சென்னை மாநகராட்சியின் 135-வது வார்டு, அசோக் நகர், 11-வது நிழற்சாலையில் பேருந்து நிறுத்தம் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில்தான் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

 

இந்த பேருந்து நிறுத்தம் முன்பாக சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகம் நடத்துவோர், பேருந்து நிழற்குடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றியுள்ளனர். உணவருந்த வருவோர் அமர்ந்து உணவருந்துவதற்கு ஏதுவாக நாற்காலிகள், குடிநீர் கேன்கள் உள்ளிட்டவற்றை அங்கே வைத்துள்ளனர்.

 

பேருந்து நிழற்குடையும், நடைபாதையும் எப்போதும் உணவருந்துவோரால் நிரம்பி இருக்கும். அவர்கள் வரும் இருசக்கர வாகனங்களையும் சாலையோரத்தில் நிறுத்தி சாலையின் அகலத்தை குறைத்துவிடுகின்றனர். இதனால் பேருந்துக்காக காத்திருப்போர் சாலையில் நின்று பேருந்து ஏறி செல்கின்றனர். இதனால் இப்பகுதி நெரிசலாக காணப்படுகிறது. அங்கு கூடும் கூட்டத்தால் குடியிருப்புவாசிகளும் சிரமப்படுகின்றனர்.

 

மேலும், அந்த சாலையோர உணவகங்களில் இரவு நேரங்களில் கொத்து பரோட்டா போடுகின்றனர். இதனால் இரவு முழுவதும் தவாவில் கொத்தும் சத்தம் கேட்டபடி இருப்பதால், அப்பகுதிகளில் வசிப்போர் நிம்மதியான உறக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். துரித உணவுகளை தயாரிக்கும்போது வெளியேறும் மிளகாய் நெடி பரவி குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

 

இதுதொடர்பாக மாநகராட்சியின் புகார் எண் 1913, மாநகராட்சி ஆணையரின் மின்னஞ்சல் போன்றவற்றில் புகார் தெரிவித்த நிலையில், கடையை அகற்றிவிட்டதாக ஒவ்வொரு முறையும் பதில் கடிதம் கொடுக்கின்றனர். ஆனால் அங்கு கடைகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன. இவ்வாறு வாசகர் தெரிவித்தார்.

 

செய்தியாளர். மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

    

comment / reply_from

related_post