dark_mode
Image
  • Friday, 25 April 2025

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமியை இபிஎஸ், ஓபிஎஸ் கடந்த 2018ஆம் ஆண்டு நீக்கினர். இதன் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ச்சியாக ஊடகங்களில் பேசி வருகிறார். இதற்காக அவர் அதிமுக ஆட்சியில் ஒருமுறை கைதும் செய்யப்பட்டார்.
இதனிடையே பிரிந்து கிடைக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைக்க ஜேசிடி பிரபாகர், கே.சி.பழனிசாமி, பெங்களூரு புகழேந்தி ஆகியோர் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தினர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, சாலையில் செல்பவர்கள் எல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு அதிமுக சார்பில் பதில் சொல்ல வேண்டுமா என்று விமர்சித்தார். அத்துடன், கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்று கூறி அவரை விமர்சனம் செய்தார்.

தன்னைப் பற்றி எடப்பாடி பழனிசாமி அவதூறாக கருத்து தெரிவித்ததாக கே.சி.பழனிச்சாமி கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என கோவை நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு பிறப்பித்தது.

இவ்வழக்கு ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகவில்லை. சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதால் இபிஎஸ் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். விசாரணை முடிந்ததும் பேட்டியளித்த கே.சி.பழனிசாமி, அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உரிய தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
 
இந்த நிலையில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், கோவை நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

comment / reply_from

related_post