செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா? - உச்ச நீதிமன்றம் கடும் கோபம்!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்டார். சுமார் 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்டது.
இறுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே வந்தார். உடனடியாக அவருக்கு மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் பொறுப்பு வழஙப்பட்டது. செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வித்யா மற்றும் அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா எனக் கேட்டு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “உச்ச நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை நான் மீறவில்லை. யாரோ ஒருவரின் உந்துதலின் பேரில் அரசியல் காரணங்களுக்காக வித்யா குமார் மனுதாக்கல் செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.
வழக்கில் சாட்சிகள் யாரையும் அச்சுறுத்தவில்லை என்றும், தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டு இருந்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, மாசிக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
செந்தில்பாலாஜி தரப்பில், சட்டப்பூர்வமாக ஜாமீன் கிடைத்த பிறகுதான் அமைச்சராக பொறுப்பு ஏற்றார், உச்ச நீதிமன்றம் விதித்த எந்த ஜாமீன் நிபந்தனையையும் மீறவில்லை என்று வாதம் வைக்கப்பட்டது.
சாட்சியங்களை கலைப்பார் என அச்சம் இருந்தால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அதனை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். மேலும், வழக்கினை வரும் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அமைச்சர் பதவியா அல்லது ஜாமீனா என்பது குறித்து அன்றைய தினம் தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description