dark_mode
Image
  • Thursday, 24 April 2025

கைகொடுத்த நான் முதல்வன் திட்டம்... யு.பி.எஸ்.சி தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள்- உதயநிதி ஸ்டாலின்!

கைகொடுத்த நான் முதல்வன் திட்டம்... யு.பி.எஸ்.சி தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள்- உதயநிதி ஸ்டாலின்!

யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 57 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற்று பயனடைந்தவர்கள். அதிலும் 18 பேர் நான் முதல்வன் உறைவிடப் பயிற்சி திட்டத்தால் பயன் பெற்றவர்கள். இது பெரிதும் மகிழ்ச்சியூட்டும் தகவலாக அமைந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் உரை

இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகளின் பலனை தற்போது கண்கூடாக பார்க்கிறோம்.


யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள்

அந்த வகையில் நேற்று வெளியான யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2016ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் இருந்து சராசரியாக 100 மாணவர்கள் வெற்றி பெற்று வந்தனர். ஆனால் அதன்பிறகு எண்ணிக்கை குறைந்தது. 2021ல் எடுத்துக் கொண்டால் வெறும் 27 தமிழர்கள் மட்டுமே யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

நான் முதல்வன் திட்டம்

இந்த நிலையை மாற்ற திமுக அரசு கொண்டு வந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். இதற்காக 10 கோடி ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார். இதன்மூலம் யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ஆம் ஆண்டிலேயே 47 பேர் தமிழகத்தில் இருந்து யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றனர். இது கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகம் ஆகும்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்

இந்நிலையில் நடப்பாண்டு 57 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர். நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த தம்பி சிவச்சந்திரன் யு.பி.எஸ்.சி தேர்வில், தமிழக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 23வது இடத்தை பெற்றுள்ளார். இதேபோல் மோனிகா அகில இந்திய அளவில் 39வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இதுபோன்ற சாதனைகள் தொடர வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

comment / reply_from

related_post