கொரோனா மூன்றாவது அலை இரண்டாவது அலைபோல தீவிரமாக இருக்காது - ஐ.சி.எம்.ஆர்
இந்தியாவில், கொரோனா மூன்றாவது அலை வந்தாலும்கூட, அது இரண்டாவது அலை கொரோனாபோல தீவிரமாக இருக்காது என ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில மாதங்களில், கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் ஏற்படும் எனக்கூறப்படும் நிலையில் ஐ.சி.எம்.ஆர். சார்பில் கணிதவியல் கோட்பாட்டின் கீழ், அதன் தாக்கம் எப்படியிருக்குமென ஆய்வுகள் செய்யப்பட்டன. அப்போதுதான், 'மூன்றாவது அலை ஏற்படுவதற்குள், இந்தியாவில் கணிசமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும். இதன் காரணமாக, கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறையும். இரண்டாவது அலை அளவுக்கு, 3 வது அலை தீவிரமாக இருக்காது' எனக்கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா திரிபு, நிச்சயம் புதிய மாறுபாட்டை எதிர்கொண்டிருக்கும். அப்படியான அந்த புது திரிபு, நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டதாகவும், எளிதில் பரவக்கூடியதாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும், தடுப்பூசி இதன் பரவலை தடுக்குமென விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அடுத்த 3 மாத காலத்துக்குள் (அதாவது இரண்டாம் அலை முழுவதுவமாக கீழிறங்கும் நேரத்தில்) 40% மக்களாவது இரு டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கான விகிதம் 55% த்துக்கும் மேல் குறையுமென கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 20 % இந்தியர்கள் தான், முதல் டோஸ் தடுப்பூசி எடுத்திருக்கின்றார்கள். அவர்களிலும் 4% பேர்தான், இரு டோஸ் தடுப்பூசியும் எடுத்துள்ளார்கள். 2021 இறுதிக்குள், 18 வயதை கடந்த அனைவருக்கும், சரியாக 94.4 கோடி இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்பது, மத்திய அரசின் இலக்காக இருக்கிறது. இது முழுவதுமாக நிறைவேறும்பட்சத்தில், மூன்றாவது அலை கொரோனாவை எதிர்கொள்வது, அரசுக்கு மிகவும் எளிதாக இருக்கும்.