கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் போலி நகைகள்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் 2.5 கோடி அளவிற்கு போலி நகைகள் இருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களை அவர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் உள்ள பெட்டகத்தை ஆய்வு செய்தபோது 2.5 கோடி ரூபாய் அளவிற்கு போலி நகைகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோல தொடர்ச்சியாக பல வங்கிகளில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளோம். ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு நகர வங்கியில் இரண்டரை கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது என்றால் அதிமுக ஆட்சியில் தலைவராக, நிர்வகிகளாக இருந்தவர்கள் மீது கண்டிப்பாக குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து புதிய ரேஷன் அட்டை வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய ரேஷன் அட்டை அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்குவதற்கு உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என பதிலளித்தார்.