உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டம்; வரும் 9ல் துவக்கி வைக்கிறார் முதல்வர்
சென்னை: தமிழகத்தில் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களது கனவுகளை அறியும், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் வரும் 9ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று முடிந்த பின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால், மற்ற மாநிலங்கள், நாடுகள் உற்றுநோக்கும் அளவுக்கு தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுவரை யாரும் செய்யாத வகையில், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்ற புதுமையான திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், முதல்வர் ஸ்டாலின் வரும் 9ம் தேதி துவக்கி வைக்கிறார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். தங்கள் மாநிலம், நாடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். தமிழகத்தில் 24,000 குடியிருப்புகள், 1.91 கோடி குடும்பங்கள் உள்ளன.
ஒரு குடும்பத்தின் கனவு என்ன என்பதை தெரிந்துகொள்ள, தமிழக அரசு விரும்புகிறது. பயிற்சி பெற்ற 50,000 தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று, 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை கொடுத்து, எந்தெந்த திட்டங்களில் பயன் பெற்றீர்கள் என கேட்பர். அது மட்டுமல்லாது, அவர்களின் மூன்று கனவுகள் என்ன எனவும் கேட்பர்.
இரண்டு நாட்களுக்கு பின், அவர்களின் வீட்டுக்கு மீண்டும் சென்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, அந்த விபரங்களை மொபைல்போன் செயலியில் பதிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு எண்ணுடன் கனவு அட்டை வழங்கப்படும். இதில் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பெறப்படும்.
குடும்பத்தின் பொதுவான கனவை கேட்பது மட்டுமல்லாது, 15 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களிடம், நான்கு கருத்துகளை கேட்க இருக்கிறோம். மாவட்ட வாரியாக, 15 நிமிட வீடியோ வெளியிட இருக்கிறோம். அதில் எட்டு நிமிடங்கள் தமிழக அளவிலும், ஏழு நிமிடங்கள், அந்த மாவட்டம் சார்ந்து தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் இருக்கும். 30 நாட்களில் வீடு வீடாகச் சென்று தன்னார்வலர்கள் தகவலைப் பெறுவர்.
வரும் 11ம் தேதி, இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். வெளிநாடுவாழ் தமிழர்கள் இணையதளத்தில் அவர்களின் கனவை தெரிவிக்கலாம். எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி விட்டோம். ஆனாலும் மக்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். அதைக்கேட்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவே, 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2030ல், தமிழகத்தை 90 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரம் உள்ள மாநிலமாக உயர்த்த, முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைய மக்களின் கருத்துகளை அறியவே இத்திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.