கஞ்சா ஹீரோக்கள் உலா வரும் தமிழ்நாடு.. யாரைக் காப்பாற்ற முயற்சி? தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், மாநிலம் முழுவதும் தற்போது ‘கஞ்சா ஹீரோக்கள்’ உலா வருகிறார்கள் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்
விடியல் ஆட்சி
சென்னை கே.கே.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் விடியல் ஆட்சி என்பது பெயரளவிலான விளம்பரமாக மட்டுமே உள்ளது என்றும், நடைமுறையில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்
.ரகசியம் ஏன்?
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய தமிழிசை, போதைப்பொருள் வியாபாரிகள் யார் என்பதைக் கண்டறிந்து பொதுமக்களுக்கு தெரிவிக்காமல், அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன் என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்தார்
.இளைஞர்களுக்கு ஆபத்து
கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், அவர்களை மறைமுகமாக காப்பாற்ற முயற்சிக்கிறதா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜீரோ கஞ்சா
இதுகுறித்து மேலும் பேசிய தமிழிசை, ஒரு காலத்தில் மதுரையில் ‘அஞ்சா நெஞ்சன்’ என்றிருந்தவரின் இன்றைய பேச்சு, தற்போது சென்னையில் ‘ஜீரோ கஞ்சா’ என்று கூறப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் உண்மையில் நடப்பது ‘ஹீரோ கஞ்சா’ கலாச்சாரம்தான் என்றும், போதைப்பொருள் விற்பனையாளர்கள் தைரியமாக செயல்படும் சூழல் நிலவுவதாகவும் கூறினார்.
கஞ்சா கூடாரம்
தமிழகமே கஞ்சா விற்பனையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபடுவோருக்கு ஆதரவு அளிப்பதைவிட, விற்பனை செய்பவர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் அவதி
அதேபோல், பெண்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களையும் தமிழிசை விமர்சித்தார். ஒரு பக்கம் ‘வெல்லும் பெண்கள்’ என்று அரசு பெருமை பேசினாலும், பல இடங்களில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் பெண்கள் வேலை செய்யும் அவல நிலை இருப்பதாகவும், உடை மாற்றுவதற்கே இடமின்றி அவர்கள் சிரமப்படுவதாகவும் கூறினார்.
ஆசிரியர்கள் போராட்டம்
புத்தாண்டு தினத்தில் இப்படிப்பட்ட வேதனையான உண்மைகளை சொல்ல வேண்டியிருப்பது வருத்தம் அளிப்பதாகவும், இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கி போராடும் சூழல் குறித்து பேசினார்.
மாற்றமே தீர்வு
ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கும், உழைக்கும் பெண்களின் உரிமை மறுக்கப்படும் நிலைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்றால், மாநிலத்தில் உண்மையான மாற்றம் தேவை என்றும் அவர் கூறினார். தமிழக மக்கள் உண்மையான விடியலை காண வேண்டுமென்றால், தேசிய அளவிலான மாற்றமே தீர்வாக அமையும் என்ற தனது கருத்தையும் தமிழிசை முன்வைத்தார்.
விடியல் பிறக்கவில்லை
தமிழகத்திற்கு உண்மையான விடியல் இன்னும் பிறக்கவில்லை என்றும், மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்த மாற்றம் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் தமிழிசை தெரிவித்தார்.