காயத்ரி மந்திர உச்சரிப்பு வாழ்க்கையை மாற்றும்; நான் 4 வயதிலிருந்து அதைக் கடைப்பிடிக்கிறேன்: அமித் ஷா
காயத்ரி மந்திர உச்சரிப்பு வாழ்க்கையை மாற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள சாந்திகஞ் மடத்திற்குச் சென்றார் அமித் ஷா.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். எனக்கு 4 வயதிருக்கும் போது எனது தாத்தா தான் இந்த மந்திரத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
சிறு வயதிலிருந்தே நான் இந்த மந்திரத்தை ஜபித்து வருகிறேன். இரக்கமும், நல் சிந்தனையும் மனித வாழ்க்கையில் அடிப்படை உணர்வுகள். அறிவு, நேர்மை, பொறுப்பு, துணிவு ஆகியன வாழ்க்கையின் ஒரு பகுதி. இதையெல்லாம் எனக்கு காயத்ரி மந்திரம் கொடுத்துள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக விடுதலையின் அமிர்த மகோத்சவம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது தேசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்து தான் 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நம் தேசம் கணக்கிட முடியாத காலம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறினார்.