உரிமை கோரப்படாத வங்கி வைப்பு, இன்சூரன்ஸ், பங்குகள் உள்ளிட்ட நிதிச் சொத்துகளை தேட புதிய ஒருங்கிணைந்த இணையதளம் அறிமுகம்
மத்திய நிதியமைச்சகம், பொதுமக்களின் உரிமை கோரப்படாத நிதிச் சொத்துகளை ஒரே இடத்தில் கண்டறிய உதவும் புதிய ஒருங்கிணைந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிக் கணக்குகளில் நீண்ட காலமாக முடங்கிக் கிடக்கும் வைப்பு நிதிகள், முதிர்வடைந்தும் பெறப்படாத காப்பீட்டு தொகைகள், இன்சூரன்ஸ் க்ளைம்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், பங்குகள் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் உள்ளிட்ட அனைத்து நிதிச் சொத்துகளையும் ஒரே தளத்தின் மூலம் பொதுமக்கள் எளிதாகத் தேடிக் கண்டறிய முடியும். இதற்காக நிதியமைச்சகம், பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பான PSB Alliance உடன் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளது.
இதுவரை ஒவ்வொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தையும் தனித்தனியாக அணுகி தகவல்களைத் தேட வேண்டியிருந்த நிலையில், புதிய வசதி அந்த சிரமத்தை நீக்குகிறது. குறிப்பாக குடும்பத் தலைவர் இறந்த பிறகு, அவர் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் முதலீடுகள் குறித்த தகவல்கள் தெரியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் மக்களும் தங்களுக்குச் சொந்தமான அல்லது குடும்பத்தினர் விட்டுச் சென்ற நிதிச் சொத்துகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகத் தேடி அறிய முடியும்.
நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் M. Nagaraju பொதுத்துறை வங்கிகளின் ஆய்வுக் கூட்டத்தின் போது இந்தத் தளத்தை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். Unclaimed Assets Portal என்ற முகவரியில் செயல்படும் இந்த இணையதளம் மூலம், அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் தொடர்பான உரிமை கோரப்படாத சொத்துகளின் விவரங்களை பொதுமக்கள் தங்களது மொபைல் அல்லது கணினி மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த முயற்சி நிதி விழிப்புணர்வை அதிகரிப்பதோடு, Viksit Bharat 2047 இலக்கை நோக்கிய நிதி உட்சேர்க்கை முயற்சிகளுக்கும் வலுசேர்க்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.