UPI பயனர்களுக்கு சூப்பர் அப்டேட், இனி PIN இல்லாமலும் பணம் செலுத்தலாம்.!
UPI பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்… இனி PIN இல்லாமலும் பணம் செலுத்தலாம்!
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் கோடிக்கணக்கான UPI பயனர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இதுவரை, UPI மூலம் பணம் அனுப்புதல், QR கோடு ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்துதல், வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்த்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு 4 அல்லது 6 இலக்க UPI PIN எண் கட்டாயமாக இருந்தது. ஆனால் இனிமேல், ரூ.5,000 வரையிலான சிறிய பரிவர்த்தனைகளுக்கு PIN எண்ணை உள்ளிடாமல், கைரேகை அல்லது முகஅடையாளம் மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பயோமெட்ரிக் அங்கீகார வசதி மூலம், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே அமைத்து வைத்துள்ள Fingerprint அல்லது Face Unlock வசதியைப் பயன்படுத்தி உடனடியாக பரிவர்த்தனைகளை முடிக்கலாம். இதனால் ஒவ்வொரு முறையும் PIN எண்ணை நினைவில் வைத்து உள்ளிட வேண்டிய அவசியம் இல்லாமல், சில விநாடிகளில் பாதுகாப்பாக பணம் அனுப்ப முடியும்.
இதுவரை, ஒருவர் UPI மூலம் பணம் அனுப்பும்போது பெறுநரின் வங்கிக் கணக்கு விவரம், UPI ID அல்லது மொபைல் எண்ணைத் தேர்ந்தெடுத்து, பின்னர் தொகையை உள்ளிட்டு இறுதியாக PIN எண்ணை உள்ளிட வேண்டியிருந்தது. இனி அந்த இறுதி கட்டத்தில் PIN-க்கு பதிலாக கைரேகை அல்லது முகஅடையாளம் காட்டினால் போதுமானது. இதனால் பரிவர்த்தனைகள் வேகமாகவும், எளிமையாகவும் மாறும்.
பாதுகாப்பு கோணத்திலும் இந்த வசதி முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. UPI PIN எண்ணை பிறர் அறிந்து கொள்ளும் அபாயம் எப்போதும் இருக்கும். இதன் மூலம் மோசடிகள் அல்லது அனுமதியில்லா பரிவர்த்தனைகள் நடக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பயோமெட்ரிக் விவரங்கள் தனிநபருக்கே உரியவை என்பதால், அதை போலியாக பயன்படுத்துவது மிகவும் கடினம். இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு மேலும் பலப்படும்.
இந்த வசதி தற்போது அனைத்து முக்கிய UPI செயலிகளிலும் மற்றும் வங்கிகளின் மொபைல் செயலிகளிலும் கிடைக்கிறது. பயனர்கள் தங்கள் UPI App-ல் சென்று, வங்கிக் கணக்கைத் தேர்வு செய்து, Biometric Authentication வசதியை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் தனித்தனியாக இந்த அமைப்பை இயக்க வேண்டியது அவசியம்.
தனிநபர்களுக்கு பணம் அனுப்புவது மட்டுமின்றி, கடைகளில் QR கோடு ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்துதல், ஆன்லைன் ஷாப்பிங் Check-out, பில் பேமென்ட் உள்ளிட்ட அனைத்து வகையான UPI பரிவர்த்தனைகளுக்கும் இந்த வசதியை பயன்படுத்தலாம். ஆனால் ரூ.5,000-ஐ கடந்த பரிவர்த்தனைகளுக்கு பழையபடி UPI PIN கட்டாயமாகவே இருக்கும்.
மத்திய அரசின் BHIM செயலி உட்பட, பல்வேறு வங்கி செயலிகள் மற்றும் பிற UPI தளங்களிலும் இந்த புதிய வசதி தற்போது அறிமுகமாகி இருப்பது, டிஜிட்டல் இந்தியா முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.