dark_mode
Image
  • Friday, 19 June 2026

கிராமுக்கு ரூ.21 ஆயிரத்தை தாண்டுமா தங்கம்? முதலீட்டாளர்களை அதிரவைத்த புதிய கணிப்பு

கிராமுக்கு ரூ.21 ஆயிரத்தை தாண்டுமா தங்கம்? முதலீட்டாளர்களை அதிரவைத்த புதிய கணிப்பு

சென்னை: உலகளாவிய பொருளாதார சூழ்நிலை மற்றும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயரக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம், உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இதனிடையே, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறையும் வரை தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான உயர்வு இருக்க வாய்ப்பில்லை என சில பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், உலக சந்தைகளில் டாலர் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால், பல நாடுகள் தற்காலிகமாக தங்கம் வாங்குவதை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், உலகின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜேபி மோர்கன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தற்போதைய விலையை விட தங்கத்தின் விலை 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.21,000-ஐ தாண்டி சுமார் ரூ.21,600 வரை உயரக்கூடும் என்றும், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2.16 லட்சத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சம், சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை கையிருப்பில் சேர்த்து வருவது ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

இதனால், முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் தங்க சந்தையின் போக்கை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

related_post