குழந்தைகள், குடும்பத்தினருக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி வழங்க உதவும் UPI Circle வசதி.. எப்படி பயன்படுத்துவது.?
குழந்தைகள், குடும்பத்தினருக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி வழங்க உதவும் UPI Circle வசதி.. எப்படி பயன்படுத்துவது?
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், யுபிஐ (UPI) செயலிகளில் பயனர்களுக்கு உதவும் புதிய அம்சங்களும் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற செயலிகளில் வழங்கப்படும் UPI Circle அல்லது Pocket Money வசதி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கான டிஜிட்டல் செலவின மேலாண்மையை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பெற்றோர் அல்லது முதன்மை கணக்கு வைத்திருப்பவர், மற்றொருவருக்கு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர செலவுக்காக ஒதுக்கி, அந்த தொகைக்குள் மட்டுமே பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிக்க முடியும்.
முன்பு மாணவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு நேரடியாக கையில் பணம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வசதி மூலம் டிஜிட்டல் முறையில் பாக்கெட் மணி வழங்க முடிகிறது. உதாரணமாக, ஒரு பெற்றோர் தங்களது மகன் அல்லது மகளுக்கு மாதம் ரூ.3,000 செலவுத் தொகையாக நிர்ணயித்தால், அந்த வரம்பிற்குள் அவர்கள் யுபிஐ மூலம் பணம் செலவழிக்கலாம். இதற்கான தொகை நேரடியாக பெற்றோரின் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும். மேலும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்தனியாக ஒப்புதல் வழங்கும் வசதி அல்லது முன்கூட்டியே செலவுக் கட்டுப்பாட்டு வரம்புகளை அமைக்கும் வசதியும் இதில் உள்ளது.
இந்த சேவையை இயக்குவதற்கு, பயனர்கள் தங்களது யுபிஐ செயலியில் UPI Circle அல்லது Pocket Money என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை Invite Dependent அல்லது Add Member என்ற தேர்வின் மூலம் இணைக்க வேண்டும். பின்னர் அந்த நபரின் UPI ID அல்லது QR குறியீட்டை பயன்படுத்தி இணைப்பு ஏற்படுத்தலாம். தேவையான சரிபார்ப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, செலவுத் தொகை மற்றும் அனுமதி அமைப்புகளைத் தேர்வு செய்தால், அந்த நபர் உங்கள் UPI Circle-இல் இணைக்கப்படுவார். இதன் மூலம் பாதுகாப்பான, கட்டுப்பாடுள்ள மற்றும் கண்காணிக்கக்கூடிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.