இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமர் மோடியின் தவறான கொள்கையே காரணம்-கார்த்தி சிதம்பரம்
இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு பிரதமர் மோடியின் தவறான கொள்கையே காரணம் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:
இந்தியாவிற்கு குறைந்தபட்சம் 200 கோடி தடுப்பூசி தேவை. அதை இந்தியாவில் தயார் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிப்புக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயார் செய்த குறைந்த அளவிலான தடுப்பூசிகளை கூட வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து விட்டார்கள்.
மாநில அரசால் தடுப்பூசிகளை வாங்க முடியாது. தடுப்பூசிகளை கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து மத்திய அரசு தவறிவிட்டது. டிசம்பர் 31-க்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று சொல்வது குருட்டு கணக்கு.
யாருடைய யோசனையும் கேட்கக்கூடிய நிலையில் மத்திய அரசு இல்லை. அமைச்சரவையில் கூட யாரும் பேச முடியாது. எந்த அதிகாரியும் பேச முடியாது. ஒரே ஒருவர் மட்டுமே பேச முடியும். இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.