
இந்தியில் தயாராகும் அருவி- படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அருவி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் பணியாற்றவுள்ள படக்குழு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு அருண் பிரபு இயக்கத்தில் வெளியான 'அருவி' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சகர்கள் வட்டத்திலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்ததற்காக அதிதி பாலன் சர்வதேசளவிலும் பல்வேறு விருதுகளை வென்றார். அருவி படமும் முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை தட்டிச்சென்றது.
தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து அருவி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படத்தில் நடிக்கவுள்ள கலைஞர்கள் மற்றும் படக்குழு பற்றி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அருவி படத்தில் அதிதி பாலன் நடித்த கதாபாத்திரத்தில் தங்கல் படத்தின் மூலம் தேசியளவில் கவனம் ஈர்த்த ஃபாத்திமா சனா ஷேக் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தை இ.நிவாஸ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் தயாரான படத்திற்கு அருவி என்று தலைப்பு வைத்ததை அடுத்து, பெற்றோர்கள் பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அருவி என்று பெயர் சூட்டினார். அதே தாக்கத்தை பாலிவுட்டில் இந்த படம் ஏற்படுத்துமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.