தமிழகத்துக்கு மார்ச் மாதத்தில் 3 முறை வரும் பிரதமர் மோடி- தேதியில் திடீர் மாற்றம்!
தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். மார்ச் மாதத்தில் மட்டும் 3 முறை வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரக்கூடிய தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியைத் தக்கவைக்கவும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவும் மும்முரமாக உள்ளன.
களத்தில் இறங்கியுள்ள கட்சிகள்
அதேபோல் நாம் தமிழர், தவெக போன்ற கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதத்தில் மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வர திட்டமிட்டுள்ளார். தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம் பிரச்சார கூட்டம்
தேர்தல் நெருங்கி வருவதால், தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் தமிழ்நாட்டின் அரசியலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி கடந்த மாதம் மதுராந்தகத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். மத்திய அமைச்சர் அமித் ஷாவும் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று சென்னை வந்தார். அடுத்த வாரம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அவரது வருகைக்குப் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 முறை வரும் பிரதமர்
பிரதமர் மோடி மார்ச் 1 ஆம் தேதி மதுரையிலும், மார்ச் 7 ஆம் தேதி வேலூரிலும், மார்ச் 11 ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூரிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். வேலூர் வருகை மார்ச் 6 ஆம் தேதியிலிருந்து மார்ச் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது