dark_mode
Image
  • Thursday, 29 January 2026

அனுமதியின்றி பாடல்கள்: நீக்கும்படி இளையராஜா வழக்கு

அனுமதியின்றி பாடல்கள்: நீக்கும்படி இளையராஜா வழக்கு

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான, டியூட் படத்தில், தன் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட பாடல்களை நீக்க கோரி, இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

 

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், சமீபத்தில், டியூட் படம் வெளியானது. இந்த படத்தில், தன் அனுமதியின்றி, 'கருத்த மச்சான், நுாறு வருஷம்' ஆகிய இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என, இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

விசாரணை

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில், 'அனுமதியின்றி, பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பாடலுக்கான உரிமை என்னிடம் உள்ளதால், படத்தில் இடம்பெற்ற பாடலை நீக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது. படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், 'பாடல்களை பயன்படுத்த சோனி நிறுவனத்திடம் அனுமதி பெற்றுள்ளோம்' என தெரிவிக்கப்பட்டது.

தள்ளிவைப்பு

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'திரையரங்கு மற்றும் ஓ.டி.டி., ஆகியவற்றில் படம் வெளியாகும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது வழக்கு தாக்கல் செய்தது ஏன்' என, இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ஏற்கனவே தயாரிப்பாளர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியபோது, அதுபோல தயாரிப்பாளர் யாரும் இல்லை என்று நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டதாக, இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

related_post