T20 World Cup 2021 Final: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
2021 டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது.
இந்நிலையில் முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் கேனே வில்லியம்சன் 85 ரன்கள் குவித்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹசில்வுட் சிறப்பாக பந்துவீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 26 ரன்கள் விட்டுக்கொடுத்த ஸம்பா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் உலக கோப்பையை வெல்லலாம் என்ற உத்வேகத்துடன் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் களம் இறங்கினர்.
அதிரடி ஆட்டம் காட்டிய டேவிட் வார்னர் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ஆரோன் பிஞ்ச் 7 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். அடுத்து களம் கண்ட மிட்செல் மார்ஸ், கிளீன் மேக்ஸ்வெல் நிலைத்து நின்று அதிரடியாக ஆடினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மார்ஸ் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
அப்போது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 31 பந்துகளில் 38 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் இருவரும் சீரான முறையில் ரன்கள் சேர்த்து வந்தனர். இதனால் கடைசி 3 ஒவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை சிறப்பாக வீசிய மிலினே 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.
இதனால் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடைசி 12 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. டீம் சௌதி பந்து வீசினார்.
அந்த ஓவரில் முதல் 2 பந்துகளில் 5 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்து சிங்கிள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து 9 பந்துகளில் 5 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு தேவைப்பட்டது.
4ஆவது பந்திலும் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆஸி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை தனதாக்கியது.