dark_mode
Image
  • Monday, 05 October 2026

விபத்து வழக்கில் புதிய திருப்பம்: நடிகர் சரண்ராஜ் மரணம் கொலை கோணத்தில் விசாரணை

விபத்து வழக்கில் புதிய திருப்பம்: நடிகர் சரண்ராஜ் மரணம் கொலை கோணத்தில் விசாரணை

சரண்ராஜ் மரணம் விபத்து அல்லவா.?
3 ஆண்டுகளுக்குப் பிறகு கொலை கோணத்தில் விசாரணை – 60 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் நடித்த நடிகர் சரண்ராஜ், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி சென்னை விருகம்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்ததாக முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னால் வந்த வாகனம் மோதியதில் சரண்ராஜ் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையும் சாலை விபத்து என்ற கோணத்திலேயே நடைபெற்றது.

ஆனால், தனது மகனின் மரணம் விபத்து அல்ல என சரண்ராஜின் தாயார் மாரியம்மாள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்தார். சரண்ராஜ் சிலரிடம் கொடுத்திருந்த பணத்தை திரும்பக் கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர் குற்றம்சாட்டினார்.

சிசிடிவி காட்சிகளில் புதிய தகவல்

இந்த வழக்கில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக அமைந்ததாக கூறப்படுகிறது. சரண்ராஜ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் வேகமாக வந்து அவரது வாகனத்தின் மீது மோதிய காட்சிகள் விசாரணையில் கவனத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த காரில் சரண்ராஜுடன் பணியாற்றிய கலை இயக்குநர் ஒருவர் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இது தற்செயலான விபத்தா அல்லது திட்டமிட்ட சம்பவமா என்ற சந்தேகம் வலுப்பெற்றது.

பணப் பிரச்சினை தொடர்பான சந்தேகம்

சரண்ராஜ் தனது மனைவியின் நகையை வைத்து பணம் கொடுத்திருந்ததாகவும், அந்தப் பணத்தை திரும்பக் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தியதால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அவரது தாயார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே சரண்ராஜை காரை ஏற்றி கொலை செய்துவிட்டு, அதனை சாலை விபத்து போல காட்ட முயற்சி செய்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மேலும், ஆரம்பகட்ட விசாரணையில் சில காவல்துறை அதிகாரிகள் உண்மையான தகவல்களை மறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் ஆவணங்கள் தயாரித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நீதிமன்றத்தை நாடிய தாய்

மகனின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி சரண்ராஜின் தாயார் மாரியம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மூன்று ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதையடுத்து, சரண்ராஜின் மரணம் குறித்து விபத்து என்ற கோணத்தைத் தாண்டி, திட்டமிட்ட கொலை என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

60 நாட்களில் விசாரணை அறிக்கை

வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நேர்மையான அதிகாரி ஒருவரை நியமித்து வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சரண்ராஜின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை 60 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் அகிலா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விசாரணை அதிகாரம் கொண்ட பதவியில் அவரை நியமிக்கக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று ஆண்டுகளாக நீடித்து வந்த சரண்ராஜ் மரண வழக்கில், சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் பணப் பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டுகள் தற்போது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அடுத்தகட்ட விசாரணையில் அவரது மரணம் தொடர்பான முழு உண்மை வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

related_post