லாக்கரில் தூங்கும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள தங்கம்.. ஏன் எடுபடவில்லை அரசின் Gold Monetisation Scheme.?
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டிக் கொண்டிருக்கும் சூழலில், வீடுகளில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை பொருளாதாரப் புழக்கத்திற்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டமே ‘கோல்ட் மானிடைசேஷன் ஸ்கீம்’ (Gold Monetisation Scheme - GMS). உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலரின் வலிமை, இறக்குமதி வரி உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்திய குடும்பங்களின் கையிலிருக்கும் தங்கத்தின் மதிப்பும் கணிசமாக உயர்ந்தாலும், அந்தத் தங்கத்தின் பெரும்பகுதி வீட்டு லாக்கர்கள் மற்றும் பீரோக்களிலேயே முடங்கிக் கிடக்கிறது. இதைச் செயல்பாட்டிற்கு கொண்டு வரவே அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ், மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய தங்க நகைகள், தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் ஒப்படைக்கலாம். அங்கு தங்கத்தின் தூய்மை பரிசோதிக்கப்பட்டு, அது உருக்கப்பட்டு சுத்தமான தங்கமாக மாற்றப்படும். பின்னர், அதற்கேற்ப முதலீட்டாளரின் கணக்கில் கிராம் அடிப்படையில் தங்கம் வரவு வைக்கப்படும். குறைந்தபட்சமாக 10 கிராம் தங்கம் முதலீடு செய்யலாம்; அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இதற்காக ஆண்டுக்கு சுமார் 2.25% முதல் 2.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. திட்ட காலம் முடிந்ததும், முதலீட்டாளர் தங்கத்தை மீண்டும் தங்கமாகவோ அல்லது அன்றைய சந்தை மதிப்புக்கு இணையான பணமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
கேட்பதற்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்தாலும், இந்தியாவில் இந்தத் திட்டம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இதற்குக் காரணம் இந்தியர்களின் தங்கம் குறித்த மனப்பான்மையே என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்திய குடும்பங்களுக்கு தங்கம் என்பது வெறும் முதலீட்டு பொருள் அல்ல; அது குடும்ப பாரம்பரியம், பாதுகாப்பு மற்றும் உணர்வுகளுடன் இணைந்த சொத்தாகக் கருதப்படுகிறது. திருமணம், குழந்தை பிறப்பு, தலைமுறைகள் கடந்து வரும் பரிசுகள் போன்ற நினைவுகளுடன் இணைந்த நகைகளை உருக்கிக் கொடுப்பதில் பலருக்கும் மனதளவில் தயக்கம் உள்ளது.
மேலும், இந்தத் திட்டம் வழங்கும் வட்டி விகிதமும் மக்களை அதிகமாக ஈர்க்கவில்லை. தங்கத்தின் விலை நீண்ட காலத்தில் தொடர்ந்து உயரும் என்ற நம்பிக்கை இருப்பதால், குறைந்த வட்டிக்காக தங்கத்தை திட்டத்தில் முடக்க விரும்பாதவர்கள் அதிகம். அதற்கு பதிலாக, அவசரத் தேவைகளில் மக்கள் ‘தங்கக் கடன்’ வசதியைப் பயன்படுத்துவதையே எளிய மற்றும் பாதுகாப்பான மாற்றாக பார்க்கிறார்கள். தங்களுடைய நகைகளை அடகு வைத்து உடனடியாக பணம் பெறவும், பின்னர் அதை மீட்டுக்கொள்ளவும் முடிவதால், நகையின் மீதான உரிமை அவர்களிடமே தொடர்கிறது.
இதனால், இந்தியாவில் வீடுகளுக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான டன் தங்கம் பொருளாதாரச் சுழற்சிக்குள் வராமல் முடங்கியே உள்ளது. அரசின் கோல்ட் மானிடைசேஷன் திட்டம் இந்தச் சிக்கலுக்கு தீர்வாக உருவாக்கப்பட்டாலும், இந்தியர்களின் ‘தங்க சென்டிமென்ட்’ மற்றும் பாரம்பரிய மனப்பான்மையை மாற்றுவது இன்னும் மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.