மே 1 மே தினம்: சென்னையில் டாஸ்மாக், பார்கள் அனைத்தும் மூடல்… ஆட்சியர் அதிரடி உத்தரவு.!
சென்னை: உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதியை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபான விற்பனை நிலையங்களும் மற்றும் பார்களும் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், 01.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003-ன் விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் விதி 25(II)(a) ஆகியவற்றின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பார்கள், FL2 உரிமம் பெற்ற கிளப்புகளின் பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களுடன் இணைந்துள்ள பார்கள், மேலும் FL3(A), FL3(AA) முதல் FL11 வரை உரிமம் பெற்றுள்ள அனைத்து மதுபான விற்பனையகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த நாளில் எந்தவிதமான மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி யாரேனும் மதுபானம் விற்பனை செய்தாலோ அல்லது விதிமுறைகளை மீறி செயல்பட்டாலோ, சம்பந்தப்பட்ட மதுபான விற்பனை விதிகளின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரும் இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மே தினத்தையொட்டி சட்டம்-ஒழுங்கை பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.