dark_mode
Image
  • Monday, 27 April 2026

சென்னையில் 83.71% வாக்குப்பதிவு… பெண்கள் அதிக ஆர்வம்; மொத்த வாக்கு உயர்வு வெறும் 20 ஆயிரம்.!

சென்னையில் 83.71% வாக்குப்பதிவு… பெண்கள் அதிக ஆர்வம்; மொத்த வாக்கு உயர்வு வெறும் 20 ஆயிரம்.!

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 85% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது முந்தைய தேர்தலை விட உயர்வாகக் கருதப்பட்டாலும், குறிப்பாக தலைநகரான சென்னை மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கையைப் பொருத்தவரை வளர்ச்சி மிகக் குறைவாகவே இருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 24,22,097 வாக்குகள் பதிவாகியுள்ளன. 2021 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது வெறும் 20,038 வாக்குகள் மட்டுமே அதிகம். சென்னை மாவட்டத்தில் மொத்தம் 28,93,505 வாக்காளர்கள் உள்ள நிலையில், 16 சட்டமன்றத் தொகுதிகளில் சராசரியாக 83.71% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நகர்ப்புற பகுதிகளுக்கான அளவில் இது நல்ல பதிவாகக் கருதப்பட்டாலும், கல்வியறிவு மற்றும் அரசியல் விழிப்புணர்வு அதிகம் உள்ள சென்னையில் இது இன்னும் அதிகமாக இருக்க வேண்டியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2026 தேர்தலில் மாநிலம் முழுவதும் 423 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்த வாக்காளர் பட்டியலில் 5,73,43,291 பேர் இடம்பெற்றிருந்தனர். இதில் 2,80,30,000 ஆண்கள், 2,93,04,000 பெண்கள், மற்றும் 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர்.

சென்னையில் அதிக வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் முதலிடத்தில் உள்ளது. அங்கு 90.53% வாக்குகள் பதிவாகி, 1,80,473 பேர் வாக்களித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பெரம்பூர் தொகுதியில் 89.73% வாக்குப்பதிவுடன் 2,03,057 வாக்குகள், கொளத்தூர் தொகுதியில் 86.11% வாக்குப்பதிவுடன் 1,82,364 வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் வேளச்சேரி தொகுதியில் 1,76,243 வாக்குகளும், விருகம்பாக்கம் தொகுதியில் 1,51,911 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மொத்த வாக்கு எண்ணிக்கையில் குறைவாக பதிவான தொகுதியாக துறைமுகம் காணப்படுகிறது. அங்கு 99,391 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சதவீத அடிப்படையில் 82.74% இருந்தாலும், மொத்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதேபோல் எழும்பூர் தொகுதியில் 85.55% வாக்குப்பதிவுடன் 1,18,726 வாக்குகள் பதிவாகியுள்ளன.

2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 6,163 வாக்குகள் குறைந்துள்ளன. ஆயிரம் விளக்கு தொகுதியில் 4,908 வாக்குகள், தியாகராய நகர் தொகுதியில் 3,839 வாக்குகள், மயிலாப்பூர் தொகுதியில் 3,172 வாக்குகள் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் 10,708 வாக்குகள், திரு.வி.கா நகர் தொகுதியில் 9,808 வாக்குகள், வேளச்சேரி தொகுதியில் 7,751 வாக்குகள், ராயபுரம் தொகுதியில் 6,077 வாக்குகள் அதிகரித்துள்ளன.

இந்தத் தேர்தலில் சென்னைக்கான முக்கிய அம்சமாக பெண்கள் வாக்குப்பதிவு அமைந்துள்ளது. மொத்தமாக 12,48,442 பெண்கள் வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில் 11,73,147 ஆண்கள் வாக்களித்துள்ளனர். 2021 தேர்தலில் 11,95,694 பெண்கள் வாக்களித்த நிலையில், இந்த முறை 52,748 பெண்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர். ஆண்களின் எண்ணிக்கையும் கடந்த முறை 11,67,237 இருந்த நிலையில், இந்த முறை 5,910 அதிகரித்துள்ளது.

சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்திருந்தாலும், மொத்த வாக்கு எண்ணிக்கையில் அதிகரிப்பு குறைவாக இருப்பதும், பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பதும், இறுதி தேர்தல் முடிவுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

related_post