dark_mode
Image
  • Saturday, 08 August 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" செயல்பாட்டிற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர் பாரம்பரியத்தில் இடம்பெறும் "தாய்மாமன் சீர்" மரபை அடிப்படையாகக் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை உடனடியாக கோருவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசாணையில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். மேலும், "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்த தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி வரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

 

related_post