Food Review யூடியூபர்களுக்கு புதிய கட்டுப்பாடு..! தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு
சமூக வலைதளங்களில் உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் குறித்த ரிவியூ வீடியோக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், Food Review செய்யும் யூடியூபர்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இனி Food Review செய்யப்படும் உணவகங்கள் மற்றும் கடைகள் கட்டாயமாக FSSAI (Food Safety and Standards Authority of India) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய அனுமதி மற்றும் உணவு பாதுகாப்பு தரநிலைகளை பின்பற்றும் நிறுவனங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறும் இடங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ரிவியூ செய்பவர்கள் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துகிறார்களா, உணவகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவகத்தின் அலங்காரம், கூட்டம் அல்லது வெளிப்புற தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்வதைத் தவிர்த்து, உணவின் தரம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகும் ரிவியூ வீடியோக்களை நம்பி மக்கள் பல்வேறு உணவகங்களைத் தேர்வு செய்கின்றனர். இதனால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேநேரத்தில், இந்த விதிமுறைகள் சிறிய மற்றும் சாலையோர உணவுக் கடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இருப்பினும், பொதுமக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியாக இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் சிலர், உணவின் சுவையை மட்டுமல்லாமல், அதிக சர்க்கரை, கொழுப்பு அல்லது உப்பு கொண்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வையும் Food Review செய்பவர்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.