மாணவிகளுக்கு முதலுதவி செய்தது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது; வருத்தம் தெரிவித்த அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை: மதுரையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியின்போது மயக்கமடைந்த மாணவிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் முதலுதவி செய்ததாகவும், அந்தச் சம்பவம் குறித்து தனது செயல்பாடு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மதுரை மேலூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தின் போது கடும் வெயிலால் சில மாணவிகள் மயக்கமடைந்து கீழே விழுந்ததாகவும், அவர்களுக்கு உடனடியாக தண்ணீர் தெளித்து முதலுதவி வழங்கியதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு பெண்ணின் தந்தை என்ற மனிதாபிமான உணர்வோடு மேற்கொண்ட உதவிகள் தவறான கோணத்தில் சித்தரிக்கப்படுவது வேதனையளிப்பதாகக் கூறிய அவர், தனது அணுகுமுறை ஏதேனும் வகையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அதிகார அமைப்புகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அமைச்சர் விளக்க அறிக்கையையும், பின்னர் வருத்தம் தெரிவிக்கும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், மாணவிகளுக்கு வழங்கிய முதலுதவிக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலான விமர்சனங்கள் வருவது ஏமாற்றமளிப்பதாகவும், அவை உண்மைக்கு புறம்பானவை என்றும் அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.