மத்திய கிழக்கில் பதற்றம் – 5 நாட்கள் தற்காலிக தாக்குதல் நிறுத்தம் அறிவிப்பு
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய வான்வழி தாக்குதல்களில் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், மேற்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் எரிசக்தி உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால், உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், உலகின் முக்கிய கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதன் மூலம் கடல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவை சமாதான பேச்சுவார்த்தையை வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை முன்னேறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்தம் நிலையான அமைதிக்கான வழியை உருவாக்குமா என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.