dark_mode
Image
  • Wednesday, 25 March 2026

உலக கவனம் ஈர்க்கும் ட்ரம்ப் பேச்சு: “நாங்கள் வெற்றி பெற்றோம்”

உலக கவனம் ஈர்க்கும் ட்ரம்ப் பேச்சு: “நாங்கள் வெற்றி பெற்றோம்”

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமெனீ உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளவாடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இரு தரப்பினரிடையேயான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

இந்த சூழலில், முக்கியமான எண்ணெய் கடத்தல் வழியான ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து உலக சந்தைக்கு செல்லும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது.

இதையடுத்து, 48 மணி நேரத்திற்குள் ஹார்மோஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால் ஈரானின் மின் நிலையங்களை தாக்குவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அதே நேரத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (24-03-26) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், “ஈரானின் ராணுவ திறன்களை நாங்கள் பலவீனப்படுத்தியுள்ளோம். அவர்கள் அணு ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டுள்ளனர். போரில் நாம் மேலோங்கி உள்ளோம். தற்போது அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு தயார்” என கூறினார்.

ஆனால், அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், நிலைமை மேலும் குழப்பமடைந்துள்ளது.

related_post