மதுபான கொள்கையில் ரூ.3,200 கோடி மோசடி; ஆந்திர முன்னாள் முதல்வருக்கு சிக்கல்

அமராவதி : ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2019 - 2024ல் ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார்.
லஞ்சம்
அப்போது, கட்சி நிர்வாகிகள் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்கள் அதிகளவில் வாங்கியதாகவும், இதற்காக, லஞ்சம் வாங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, அவருக்கு மிகவும் நெருக்கமானவரான அவரது தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த ராஜசேகர ரெட்டி என்ற ராஜ் காசிரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் காவலில் எடுப்பதற்காக, சிறப்பு விசாரணைக் குழு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின்போது, ஏ.பி.எஸ்.பி.சி.எல்., எனப்படும் ஆந்திரா மாநில மதுபான வாரியம் வாயிலாக மதுக்கடைகளை திறப்பதற்கு உத்தரவிடப்பட்டது. அதற்கு முன், மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்கள் வாங்குவதற்கு, கம்ப்யூட்டர் வாயிலான நடைமுறை அமலில் இருந்தது.
இதன்படி, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட அளவு மட்டுமே வாங்க முடியும். ஆனால், இந்த நடைமுறையை கைவிட்டு, மிகப்பெரிய மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்கள் வாங்குவது வெகுவாக குறைக்கப்பட்டது.
ஒய்.எஸ்.ஆர்.காங்., பிரமுகர்கள் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக மதுபானங்கள் வாங்கப்பட்டன. இதற்காக லஞ்சம் வாங்கப்பட்டது. இந்த பணம், காசிரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. அது கட்சி நிர்வாகிகளான விஜய் சாய் ரெட்டி, மிதுன் ரெட்டி உள்ளிட்டோரிடம் வழங்கப்பட்டது.
ஹவாலா
பின் அவை, பல வகைகளில் சொத்துக்கள் உள்ளிட்டவையாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் ஹவாலா மோசடிக்கும் பயன்படுத்தப்பட்டன.
இந்த வகையில், மாதத்துக்கு, 50 - 60 கோடி ரூபாய் வரை லஞ்சமாக வாங்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 3,200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலை அடுத்து, முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விசாரிக்க, ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description