பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

புதுடில்லி: பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். உலகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒடுக்கத் தவறிய பாகிஸ்தானுடனான தொடர்பை இந்தியா முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது. மேலும், இந்த தாக்குதலை நடத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இத்தாலி பிரதமர் மெலோனி உள்பட ஜப்பான், யூ.ஏ.இ., ஈரான், இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் லாமி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவில், 'பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமியுடன் தொலைபேசியில் பேசினேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறினேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description