திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெகவே போட்டி; அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன.
இந்த ஐந்து தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், "முதலமைச்சர் விஜய் மிகப்பெரிய வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதி என்பதால், அந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகமே நேரடியாக களமிறங்கும். கூட்டணி கட்சிகளுக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்படாது" என்று தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, வரவிருக்கும் இடைத்தேர்தலைச் சுற்றிய அரசியல் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது.