dark_mode
Image
  • Monday, 08 June 2026

செய்தித்தாளில் உணவு பார்சல் செய்வது ஆபத்து: பொதுமக்களுக்கு FSSAI எச்சரிக்கை

செய்தித்தாளில் உணவு பார்சல் செய்வது ஆபத்து: பொதுமக்களுக்கு FSSAI எச்சரிக்கை

சாலையோர உணவுக் கடைகள் முதல் சிறிய உணவகங்கள் வரை பல இடங்களில் சூடான பஜ்ஜி, வடை, சமோசா உள்ளிட்ட உணவுகளை செய்தித்தாளில் வைத்து வழங்கும் நடைமுறை தொடர்ந்து காணப்படுகிறது. ஆனால் இந்தப் பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) எச்சரித்துள்ளது.

அதிக வெப்பம் மற்றும் எண்ணெய் பசையுடன் இருக்கும் உணவுகளை செய்தித்தாளில் வைக்கும் போது, அச்சு மையில் உள்ள வேதிப்பொருட்கள் உணவுடன் கலக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஈயம் உள்ளிட்ட சில கன உலோகங்கள் மற்றும் வேதியியல் கலவைகள் உடலுக்குள் செல்வதால் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மும்பையில் உணவுப் பொருட்களை செய்தித்தாளில் வழங்கியதாகக் கூறப்படும் ஒரு உணவுக் கடை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய விதிகளின்படி, செய்தித்தாள்கள், பழைய புத்தகப் பக்கங்கள் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதப் பொருட்களை உணவு சேமிப்பு மற்றும் பார்சலுக்குப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், பல இடங்களில் இந்த நடைமுறை இன்னும் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

இதற்கு மாற்றாக, உணவுப் பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டர் பேப்பர், உணவுத் தரம் கொண்ட பேக்கேஜிங் பொருட்கள் மற்றும் எண்ணெயை உறிஞ்சும் சிறப்பு தாள்களை பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், உணவு விற்பனையாளர்கள் பாதுகாப்பான பேக்கேஜிங் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், நுகர்வோரும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

related_post