எஃப்சிஆர்ஏ: வெளிநாட்டு நிதியுதவியில் வெளிப்படைத்தன்மையே முக்கியம் – தமிழக பாஜக
சென்னை: வெளிநாட்டு நிதியுதவிகள் சட்டப்பூர்வமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் பெறப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதே வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) முக்கிய நோக்கம் என தமிழக பாஜக சிறுபான்மையினர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக சிறுபான்மையினர் பிரிவு முன்னாள் பொதுச் செயலாளர் கல்வாரி என். தியாகராஜன் கூறுகையில், உண்மையான சமூக சேவைப் பணிகளுக்காக சட்ட விதிகளுக்கு உட்பட்டு பெறப்படும் வெளிநாட்டு நிதியுதவிகளுக்கு பாஜக எதிரானது அல்ல என்றார்.
கல்வி, சுகாதாரம், அறப்பணிகள், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட சமூக நலப் பணிகளுக்காக பெறப்படும் முறையான வெளிநாட்டு நிதியுதவிகள் பிரச்சினையாகக் கருதப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இந்தியாவின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு, பொது நலன் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உரிய கண்காணிப்பு அவசியம் எனவும் அவர் கூறினார்.
வெளிநாட்டு நிதிகளின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், சட்டத்துக்கு இணங்க செயல்படும் உண்மையான சமூக சேவை அமைப்புகள் தேவையற்ற தலையீடுகள் இன்றி தங்கள் பணிகளை மேற்கொள்ளும் சூழல் உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“தேசிய பாதுகாப்பையும் உண்மையான சமூக சேவையையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக பார்க்க வேண்டியதில்லை. சட்டத்தை வெளிப்படையாகவும் பொறுப்புடனும் அமல்படுத்துவதன் மூலம் இரண்டையும் பாதுகாக்க முடியும். பாஜக வெளிநாட்டு நிதியுதவிக்கு எதிரானது அல்ல; அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கே எதிரானது” என்று கல்வாரி என். தியாகராஜன் தெரிவித்துள்ளார்.