dark_mode
Image
  • Thursday, 24 April 2025

இன்று மிதமான மழை : வானிலை மையம் தகவல்

இன்று மிதமான மழை : வானிலை மையம் தகவல்

 'தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதன் அறிக்கை:


தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில், இரு காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல், ஏப்., 27 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில், ஏப்., 25 வரை, அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகக்கூடும். வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகக் கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, கரூர் மாவட்டம், கரூர் பரமத்தியில், 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 39.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி நகரங்களில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. தர்மபுரி, திருத்தணி, வேலுார் நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.

comment / reply_from

related_post