dark_mode
Image
  • Friday, 04 April 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு – மீனவர்கள், விவசாயிகள் முன்னெச்சரிக்கை தேவை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு – மீனவர்கள், விவசாயிகள் முன்னெச்சரிக்கை தேவை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு – மீனவர்கள், விவசாயிகள் முன்னெச்சரிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தல்

 

கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் செவ்வாய் (11/03/2025) மற்றும் புதன் (12/03/2025) ஆகிய நாட்களில் பல்வேறு இடங்களில் மழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது. இலங்கை அருகே உருவாகி, தென்கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நகர்ந்து வரும் இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு நோக்கி நகரும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக, இன்று (10/03/2025) இரவு முதல் காற்றின் திசை மாற்றம் துவங்கி, ஈரப்பதம் நிறைந்த கடல் காற்று கன்னியாகுமரி மாவட்டம் நோக்கி செல்லும்.

 

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மழை தொடங்கும் வாய்ப்பு இருப்பதால், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் புதன்கிழமை (12/03/2025) கனமழை பெய்யலாம். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஆரல்வாய்மொழி கணவாய் பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் நிலையில், வலுவான மேகங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலின் இறுதி திருவிழா நாளை (11/03/2025) நடைபெற உள்ளதால், கடை வைத்திருக்கும் வியாபாரிகள் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.

 

மீனவர்கள் குறித்த எச்சரிக்கை:

11, 12, 13ஆம் தேதிகளில் கடலில் சூறைக் காற்று வீசும் என்பதால், இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் நிலையில், கடல் அலைகள் அதிகரிக்கலாம் என்பதால், குறைந்த ஆழத்தில் மீன்பிடிக்கச் செல்லும் சிறு படகுகளும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

 

விவசாயிகள் எச்சரிக்கை:

நெல் அறுவடை பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள், இன்று (10/03/2025) முழுவதும் அறுவடையை முடித்து வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். புதன்கிழமை (12/03/2025) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

 

மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கி, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

 

comment / reply_from

related_post