dark_mode
Image
  • Wednesday, 15 July 2026

அ.தி.மு.க-வுக்கு மேலும் பின்னடைவு.? 10 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க. பக்கம் செல்லலாம் என தகவல்

அ.தி.மு.க-வுக்கு மேலும் பின்னடைவு.? 10 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க. பக்கம் செல்லலாம் என தகவல்

சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க-வின் முக்கிய தலைவர்களாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைய உள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தத் தகவலின்படி, சட்டப்பேரவையில் தனது பலத்தை மேலும் அதிகரித்து தனிப் பெரும்பான்மையை உறுதி செய்யும் நோக்கில், த.வெ.க. தலைமை "ஆபரேஷன் L" (Operation L) என்ற பெயரில் ரகசிய அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அ.தி.மு.க-வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.க-வில் இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மேலும் 10 எம்.எல்.ஏ-க்கள் இணைவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 10 பேரும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து அதிகாரப்பூர்வமாக த.வெ.க-வில் இணையக்கூடும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் உண்மையாக இருந்தால், தமிழக அரசியல் சமன்பாடுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க. தரப்பிலிருந்தோ அல்லது தமிழக வெற்றிக் கழகத் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.

related_post