வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள், VVPAT என்றால் என்ன?

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6 அன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கும். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் மே 2ஆம் தேதி வெளியாகும்.
வாக்குப்பதிவு நடக்கும்போது தாங்கள் வாக்களித்தது சரியான வேட்பாளருக்கு சென்றுள்ளதா என்று வேட்பாளர்கள் அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு வாக்காளருக்கு காட்டப்படும். இது குறித்த சில முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறோம்.
1.VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் டிரேல் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
2.வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்கை பதிவு செய்ய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒப்புகைச் சீட்டு ஏழு விநாடிகளுக்கு மட்டுமே வாக்காளருக்கு காண்பிக்கப்படும். பின் அது ஒரு சீல் வைக்கப்பட்ட பெட்டியில் விழுந்துவிடும்.
3.மேலும் இந்த இயந்திரம் வாக்காளர் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும்.
4.2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் இந்த VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியது. ஆனால் சில தொகுதிகளில் மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது.
5."VVPAT இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முறை துல்லியமாக செயல்பட உதவுகிறது. வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற VVPAT இயந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்." என உச்சநீதிமன்றம் தெரிவித்தது
6.வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக இந்த VVPAT இயந்திரங்கள் பார்க்கப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர் VVPAT இயந்திரங்கள் அவசியமான ஒன்று என்று கூறுகின்றனர்.
7. இந்தமுறை நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.
8.2015ஆம் ஆண்டு முதல், இந்த VVPAT முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.
9."இதுவரை ஒருமுறை கூட வாக்குப்பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு மாறான சின்னத்தில் வாக்குகள் பதிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
10.இது முதன்முறையாக 1999இல் நடந்த கோவா சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.