
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமமுக வேட்பாளர் மனுக்கள் ஏற்பு..!
திருமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார், அமமுக வேட்பாளர் ஆதி நாராயணன் ஆகியோர் மனுக்கள் மீது பரஸ்பர புகாரின்பேரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டது.
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 31 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் போட்டியிடுகிறார். அவரது மனுவில் அரசு வழக்கறிஞர் முன்மொழிந்தது தவறு எனக்கூறி அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதேபோல அமமுக வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் இருப்பதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து மற்ற கட்சிகள் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் அமைச்சர் ஆர். பி .உதயகுமாரின் மனுவும், அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் மனுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
பிறகு இரு புகார்கள் மீதும் பரிசீலனை செய்யப்பட்டு இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்த நபர் ஒருவர் வெளியூர் நபர் கையெழுத்திட்ட அவரது மனு நிராகரிக்கப்பட்டது.