dark_mode
Image
  • Thursday, 06 August 2026

தமிழக பட்ஜெட்: 10 அரசு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் – அரசியல் வட்டாரத்தில் விவாதம்

தமிழக பட்ஜெட்: 10 அரசு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் – அரசியல் வட்டாரத்தில் விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக 2026–27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வாசித்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி, சமூக நலன், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பல அரசு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநில வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் முக்கியமாக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வழங்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதே நேரத்தில், திட்டங்களின் செயல்பாடு மேம்படுத்தப்பட்டு தொடரும் என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டம் தற்போது 'வெற்றி மடிக்கணினி திட்டம்' என்ற பெயரில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உயர்தர வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்பட்டதாகவும், இனியும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோருக்காக உருவாக்கப்பட்ட 'முதல்வர் படைப்பகம்' திட்டம் தற்போது 'டிஜிட்டல் நூலகம்' என்ற பெயரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, இணைய வசதி, டிஜிட்டல் கற்றல் வளங்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த மையங்கள் தொடர்ந்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் இனி 'நவீன மிதிவண்டி திட்டம்' என்ற பெயரில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மிதிவண்டிகளில் ஹெல்மெட் வைக்கும் வசதி, தண்ணீர் பாட்டில் ஹோல்டர் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் இடம்பெறும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் இனி 'காமராஜர் சிறப்பு பள்ளிகள்' என்ற பெயரில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட 'நான் முதல்வன்' திட்டம், தற்போது 'வெற்றி திறன் பயிற்சி திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன், போட்டித் தேர்வு பயிற்சி மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான பயிற்சிகள் இந்தத் திட்டத்தின் மூலம் தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனுடன், ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு ஊக்குவிப்பு திட்டம் 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்', 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம் 'வெற்றி வீடு வழங்கும் திட்டம்', 'அன்பு சோலை' திட்டம் 'முதியோர் பொழுதுபோக்கு திட்டம்', 'நன்னிலம் மகளிர் நில உரிமைத் திட்டம்' 'மண்ணின் மகள் திட்டம்' எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சியான திமுக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் மின்வெட்டு, காவிரி நீர் பிரச்சினை, நீட் தேர்வு, கோயில் நில விவகாரம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கவனம் திட்டங்களின் பெயர் மாற்றத்தில் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் விமர்சித்துள்ளனர்.

மறுபுறம், அரசு தரப்பு, பெயர் மாற்றம் என்பது திட்டங்களின் நோக்கத்தை மாற்றுவதற்காக அல்ல; அவற்றை புதிய நிர்வாகக் கண்ணோட்டத்துடன் மேலும் விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று விளக்கம் அளித்துள்ளது. திட்டங்களின் தரம், பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் செயல்திறனை உயர்த்தும் நோக்கில் பல்வேறு மேம்பாடுகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசு வலியுறுத்தியுள்ளது.

திட்டங்களின் பெயர் மாற்றம் வெறும் நிர்வாக நடவடிக்கையா, அல்லது அரசியல் அடையாள மாற்றமா என்ற விவாதம் தற்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் இந்த விவகாரம் சட்டப்பேரவை மற்றும் அரசியல் அரங்கில் மேலும் தீவிரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

related_post