9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கிடையாது எனவும், தேர்வுகள் இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.
கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன.
தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் 2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எதிர்பாராத தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன.
கரோனா பாதிப்பு குறைவு
கரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிப்.8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இதற்கிடையே மே 3-ம் தேதி 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கற்றல் இழப்பால் பிற வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இன்றித் தேர்ச்சி வழங்க வேண்டும், குறைந்தபட்சம் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கிடையாது எனவும் தேர்வுகள் இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.