
5 ஆண்டுகளில் ஓபிஎஸ் சொத்து பல மடங்கு அதிகரிப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளில் 843% உயர்ந்திருப்பது அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி, சீமான், கமல்ஹாசன், குஷ்பு என பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் தங்கள் பெயரில் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை குறிப்பிட வேண்டும். அசையும் சொத்து, அசையா சொத்து மதிப்புகளை தெரிவிக்க வேண்டும்.
அந்த வகையில் துணை முதல்வர் தாக்கல் செய்த ஆவணங்களின் மூலம் அவர் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு 55 லட்சம் ரூபாயாக இருந்த துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் அசையும் சொத்து மதிப்பு தற்போது 5.19 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல அசையா சொத்து 2016ஆம் ஆண்டு 98 லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது 2.64 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.