2026ல் நிச்சயம் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்: அண்ணாமலை உறுதி

சென்னை: '' 2026ல் நிச்சயம் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பேரணி நடக்கும்
நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது. மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயலிழந்து விட்டது. பிறகு எப்படி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க முடியும்?
குற்றங்கள் அதிகரிப்பதால், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய போலீசார் மறுக்கின்றனர். முதலில் கிராமத்தில் நடந்தது தற்போது நகரின் மையப்பகுதியில் நடக்கிறது. இது கண்டனத்திற்குரியது.
இதனை கண்டித்து மகளிர் அணியினர், நாளை (ஜன.,3ம் தேதி) மதுரையில் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். இதற்கு மதுரை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், திட்டமிட்டபடி இந்த பேரணி நடக்கும்.
வெள்ளை அறிக்கை வேண்டும்
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு பஞ்சப்பாட்டு அதிகரித்து உள்ளது. தனியார் பள்ளி கூட்டமைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பங்கேற்றார். அங்கு, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் 500 அரசு பள்ளிகளை தத்தெடுப்போம். சிஎஸ்ஆர் நிதி கொடுப்போம் எனக் கூறியதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.தற்போது இதனை மறுக்கின்றனர்.
தனியார் பள்ளிகள் ஏன் சிஎஸ்ஆர் கொடுக்க வேண்டும்? அரசு செய்ய வேண்டிய வேலையை அவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அரசு செய்ய வேண்டிய வேலையை தனியாரிடம் தாரை வார்த்து கொடுக்கும் வேலையை செய்ய துவங்கி உள்ளனர்.
தி.மு.க.,வினர் ஏராளமானோர் பள்ளி நடத்துகின்றனர். சேதம் அடைந்த 10 ஆயிரம் பள்ளிகளை சீரமைப்போம் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்.
என்ன நிர்வாகம்
தமிழக அரசு கடந்த ஆண்டு 90 ஆயிரம் கோடிகடன் வாங்கியது. இந்தாண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளது. இவ்வளவு கடன் வாங்கியும் பொங்கல் பரிசு கொடுக்க பணம் இல்லை என்றால் என்ன நிர்வாகம் செய்கின்றனர்?
வைகோவுக்கு பதில்
தி.மு.க.,வில் இருந்து வைகோ பிரிந்தபோது எதற்காக அக்கட்சியை அவர் எதிர்த்தாரோ தற்போது அதற்காக நாங்கள் எதிர்க்கிறோம். வைகோவை போன்று தி.மு.க.,வை விமர்சித்தவர் வேறு யாரும் இருக்க முடியாது. அவர் கண் முன்னால் 2026ல் தி.மு.க., ஆட்சியை அகற்றிக்காட்டுவோம். அதனை அவர் பார்க்க வேண்டும்.
புரியாது
இன்று வரை நான் செருப்பு போடாமல் இருக்கிறேன். எனக்கு நானே சாட்டையால் அடித்ததுக் கொண்டது புரிய வேண்டியவர்களுக்கு புரியும். தி.மு.க.,வினருக்கு ஏன் புரிய வேண்டும்? அவர்களுக்கு புரியாது. 2026 ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அவர்களுக்கு புரியும். அதுவரை புரியாது. கிராமத்தில் காவல் தெய்வங்களை வழிபடுபவர்களுக்கு சவுக்கடி என்பது புரியும். இதில் இருந்து பின் வாங்கப்போவது கிடையாது. 2026ல் நிச்சயம் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description