dark_mode
Image
  • Thursday, 06 March 2025

தமிழக அரசு விதித்த 1% செஸ் வரியை திரும்ப பெற வேண்டும் – ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு விதித்த 1% செஸ் வரியை திரும்ப பெற வேண்டும் – ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு மக்காச்சோளத்திற்கு விதித்த 1% செஸ் வரியை திரும்ப பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். வேளாண் வணிகம் மற்றும் விற்பனை தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

வேளாண் விற்பனை குழுக்கள் மூலம் ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட விவசாயப் பொருட்களுக்கு 1% செஸ் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 18 மாவட்டங்களில் மக்காச்சோளத்திற்கும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

திருப்பூர், ஈரோடு, கோவை, நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏற்கெனவே 1% செஸ் வரி வசூலிக்கப்படும் நிலையில், தற்போது நாமக்கல், சேலம், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர், விருதுநகர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்களிலும் மக்காச்சோளத்திற்கு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் கிராமப்புறங்களில் விவசாய நிலத்திலிருந்து நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், வரி விதிப்பால் வியாபாரிகள் கிராமங்களில் சென்று மக்காச்சோளத்தை வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

 

விவசாய நிலத்திலிருந்து நேரடியாக வியாபாரிகளுக்கு விற்கும் பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகள், வியாபாரிகள் இடையே நேரடியாக நடைபெறும் விற்பனையை தமிழக அரசு வரி விதிப்பதன் மூலம் தடுக்கக்கூடாது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக மாற்றியிருக்கிறது.

 

மேலும், செஸ் வரி விதிப்பால் மக்காச்சோளத்தின் விலை சரிந்து விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ.3,500-க்கு விற்றால்தான் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் நிலையில், தற்போது ரூ.2,800-க்கு விற்று வந்த மக்காச்சோள விலை, செஸ் வரி விதிப்பால் ரூ.2,300-ஆக குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.500 வரை நஷ்டம் அடைந்துள்ளதாக ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.

 

இதற்கு தமிழக அரசின் வரி விதிப்பே காரணம் என்றும், இந்த வரி திரும்ப பெறப்படும் வரை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தொடர்ந்து போராடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தமிழக அரசு வேளாண்மை துறைக்கு உட்பட்டு செயல்படும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை விதித்த 1% செஸ் வரியை வேளாண் விற்பனைக்குழு வளாகங்களில் மட்டும் வசூலிக்க வேண்டும். மேலும், விவசாய நிலங்களில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே நடைபெறும் நேரடி விற்பனைக்கு முழுமையாக வரிவிலக்கு வழங்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

By PTSNEWS M KARTHIK 

 

comment / reply_from

related_post