dark_mode
Image
  • Thursday, 06 March 2025

மும்மொழிக் கொள்கையைப் போல ஸ்மார்ட் மீட்டரையும் அரசு எதிர்க்க வேண்டும்: ராமதாஸ்

மும்மொழிக் கொள்கையைப் போல ஸ்மார்ட் மீட்டரையும் அரசு எதிர்க்க வேண்டும்: ராமதாஸ்

 

விழுப்புரம்: மும்மொழி கொள்கைக்கு திடமாக எதிர்ப்பு தெரிவிப்பது போல வேளாண் மின் இணைப்புகளில் பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டரை பொறுத்தமுடியாது என தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: கரும்பு 9.5 விழுக்காடு பிழித்திறன் உள்ளவைக்கு கொள்முதல் விலை ரூ.3151 போதாது. டன்னுக்கு கூடுதலாக ரூ.1,000 சேர்த்து வழங்கவேண்டும். உற்பத்தி செலவே டன்னுக்கு ரூ.3200 ஆகிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 2021-ம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் டன்னுக்கு ரூ.4000 வழங்கி இருந்தால் தற்போது ரூ.5000 ஆக உயர்ந்திருக்கும்.

 

முந்தைய ஆட்சியில் வழங்கிய ஊக்க தொகையை வழங்கி, பின் அதுவும் நிறுத்தப்பட்டது . ஊக்கத்தொகை ரூ.1000 வழங்க வேண்டும். 1200 வேளாண் மின் இணைப்புகளுக்கு சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மின் இணைப்புகளை ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பொறுத்தப்பட உள்ளது. இதனால் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்பதை விவசாயிகள் ஏற்கவில்லை.

 

விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதை கண்காணித்து, வரம்பு நிர்ணயித்து அதற்கு மேல் பயன்படுத்தும் மின் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை விவசாயிகள் ஏற்கவில்லை. 60 விவசாயிகளின் உயிர் தியாகத்திற்கு பின்பே இலவச மின்சாரம் கிடைத்தது.

 

மும்மொழி கொள்கைக்கு எதிராக திடமாக முடிவெடுத்த அரசு, ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறவேண்டும். அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க அரசு இதற்கு நிரந்தர தடை பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இந்த சூதாட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 5 பேர் உட்பட இந்த ஆண்டு 7 பேர் உயிரிழதுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு விதித்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கிய பின்பு 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் அரசு தடை பெற வேண்டும்.

 

மீண்டும் தொடங்கியது மின்வெட்டு: கோடை வெப்பத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில், பகலில் 30 நிமிடம் மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது 3000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 4500 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.

 

மக்காசோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு விழுக்காடு சந்தை வரியை தமிழக அரசு நீக்கவேண்டும். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். மதுராந்தகம் ஏரியை தூர் வாரி பலப்படுத்துவதன் மூலம் நீர் கொள்ளளவை உயர்த்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் 60 சதவீதப்பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.

 

எனவே ஏரி சீரமைக்கும் பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது கௌரவத்தலைவர் ஜிகே மணி, வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர். மு கார்த்திக் புதிய தலைமைச் செய்தி

 

 

    

comment / reply_from

related_post