dark_mode
Image
  • Thursday, 06 March 2025

ஜெகத்ரட்சகன் கம்பெனி VS செங்கல்பட்டு கலெக்டர் வழக்கில் செக்! அப்போ கிளாம்பாக்கம் பயணிகள் கதி?

ஜெகத்ரட்சகன் கம்பெனி VS செங்கல்பட்டு கலெக்டர் வழக்கில் செக்! அப்போ கிளாம்பாக்கம் பயணிகள் கதி?

 

சென்னை: கிளாம்பாக்கத்தில் உள்ள நிலத்தை கையகப்படுத்துவதில் விதிமுறைகளை கலெக்டர் முறையாக பின்பற்றவில்லை என கூறி 'பிரீமியம் லெதர் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின் உரிமையாளர்களான திமுக எம்.பி., எஸ்.ஜெகத்ரட்சகன், மற்றும் ஜெ.ஸ்ரீனிஷா, ஜெ.ஜெ.சுந்தீப் ஆனந்த் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு கலெக்டர் பிறப்பித்த அறிவிப்புகளை ரத்து செய்திருக்கிறது. இதன் காரணமாக கிளாம்பாக்கம் பயணிகளுக்கு மேம்பாலம் அமைவது இன்னும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

 

சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை பாரிமுனையில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தாம்பரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டுக்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

அதன்பிறகு அரசு பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து சென்றன.அதன்பின்னர் ஆம்னி பேருந்துகள் வந்தன..படிப்படியாக கடைகள், வணிக நிறுவனங்கள், ஏடிஎம்கள் என பல்வேறு வசதிகளும் வந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்த பின்னர், அருகில் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கு பணிமனையும் கட்டப்பட்டது. அதுவும் திறக்கப்பட்டது. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தினசரி 65,000 முதல் ஒரு லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

 

ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், ரயில் நிலையம் இன்னும் அமைக்கப்படவில்லை.. பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதேபோல் தமிழ்நாட்டிலேயே மிக மிக அதிக வாகனங்கள் கடந்து செல்லும் ஜிஎஸ்டி சாலையில் நடைமேம்பாலமோ அல்லது பேருந்துகள் கடந்து செல்வதற்கு மேம்பாலங்களோ இல்லை..

 

மேம்பாலத்தை பொறுத்தவரை, கிளாம்பாக்கம் தொடங்கி காட்டாங்குளத்தூர் வரை அமைக்கப்பட உள்ளது. அதன் காரணமாக மேம்பாலம் அமைக்கப்படவில்லை.. இதனால் மக்கள் ஆபத்தான முறையில் ஜிஎஸ்டி சாலையை கடந்து சென்று வருகிறார்கள். அதேநேரம் மக்கள் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்லவும், புதிதாக அமைக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு செல்லவும் ஆகாய நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

 

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், ஜி.எஸ்.டி., சாலையில், 74.50 கோடி ரூபாயில், நடைமேம்பாலம் அமைக்கும் பணியை, சி.எம்.டி.ஏ. - போக்குவரத்து குழுமமான 'கும்டா' இணைந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. .கடந்தாண்டு, மார்ச் 24ல், இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

 

இதற்காக ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டியுள்ள ஒரு ஏக்கர் 45 சென்ட நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக 2023-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி செங்கல்பட்டு கலெக்டர் அறிவிப்பாணை வெளியிட்டார். இந்த நிலத்தை கையகப்படுத்துவது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தார். பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவதற்கு முன்பு, இந்த நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என கடந்த ஆண்டு ஜூன் 17-ந்தேதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவிப்பினை வெளியிட்டார்.

 

இந்நிலையில் தங்களது நிலத்தையும் செங்கல்பட்டு கலெக்டர் கையகப்படுத்தியுள்ளார் என்று கூறி அந்த அறிவிப்புகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் 'பிரீமியம் லெதர் கார்ப்பரேஷன்' என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான தி.மு.க., எம்.பி., எஸ்.ஜெகத்ரட்சகன், மற்றும் ஜெ.ஸ்ரீனிஷா, ஜெ.ஜெ.சுந்தீப் ஆனந்த் ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்கள்.

 

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பளித்தார். இதன்படி, சட்டப்படி, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, முதல் அறிவிப்பை தமிழ்நாடு அரசு அரசிதழில் தான் வெளியிட வேண்டும்.

 

ஆனால், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், மாவட்ட அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்ட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என்று அறிவித்து, நிலத்தை எடுத்துள்ளார். சட்டப்படி அவ்வாறு செங்கல்பட்டு கலெக்டர் அறிவிக்க முடியாது.

 

கிளாம்பாக்கம் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில், நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை சட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகள் கலெக்டர் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. னவே, இந்த நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் இரு அறிவிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. சட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றி, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மீண்டும் மேற்கொள்ளலாம்" என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

 

உரிய முறையில் சட்ட விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அருகே நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதால், மீண்டும் முதலில் இருந்து அறிவிப்புகளை வெளியிட்டு மேற்கொள்ள வேண்டும்.. இதன் காரணமாக கிளாம்பாக்கம் நடைமேம்பாலம் அமைக்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவின் எம்பி ஜெகத்ரட்சகன் தரப்பு கிளாம்பாக்கம் நடைமேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

BY.PTS NEWS M.KARTHIK

comment / reply_from

related_post