144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா பிரயாக்ராஜில் கோலாகல தொடக்கம்

பிரயாக்ராஜ்: இன்று உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக துவங்குகிறது. வழக்கமாக கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. ஆனால், இன்று (ஜனவரி 13) நடக்க உள்ள கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த மகா கும்பமேளா காலத்தில் நான்கு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும். இதன் காரணமாக இந்நிகழ்வு மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.
45 கோடி பேர்
இன்று துவங்கி பிப்.26 வரை 45 நாட்கள் நடக்கும் மகா கும்பமேளாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இந்தியாவின் பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜய்ன், நாசிக் போன்ற நான்கு புனித இடங்களில் கும்பமேளா நடைபெறும். இந்தாண்டு உ.பி., மாநிலத்தின் பிரயாக்ராஜில் நடக்க உள்ளது.
உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து பக்தர்களும், துறவிகளும் மஹா கும்பமேளா தினத்தில் கங்கையில் புனித நீராட உள்ளனர். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் என அழைக்கப்படும் திரிவேணி சங்கமத்தில் நீராட உள்ளனர். அவ்வாறு நீராடுவதால் இப்பிறவியின் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பல்வேறு புனித நதிகளில் நீராடல்
கும்பமேளா நிகழ்வின் போது இந்தியாவின் பல்வேறு புனித நதிகளில் பக்தர்கள் நீராடுவார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கங்ககை நதியிலும், ம.பி.,யின் உஜ்ஜயினில் சிப்ரா நதியிலும், மஹாராஷ்டிராவிலுள்ள நாசிக்கில் கோதாவரியிலும், உ.பியில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை நதியிலும் மக்கள் புனித நீராடுவார்கள்.
நான்கு வகையான கும்பமேளாக்கள்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது கும்பமேளா என்றும், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது அர்த்த கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது பூர்ண கும்பமேளா மற்றும் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது மஹா கும்பமேளா என்று அழைக்கப்டுகிறது.
வெவ்வேறு தேதிகளில் நடக்க உள்ள ஸ்நானங்கள்
ஜனவரி 13 அன்று முதலாவதாக நடக்கும் ஸ்நானம் பவுச பூர்ணிமா ஸ்நானம், ஜனவரி 15ல் மகர சங்கராந்தி ஸ்நானம், ஜனவரி 29ல் மவுனி அமாவாசை ஸ்நானம், பிப்ரவரி 3ல் வசந்த பஞ்சமி ஸ்நானம், பிப்ரவரி 12ல் மாசி பூர்ணிமா ஸ்நானம் மற்றும் பிப்ரவரி 26ல் மஹா சிவராத்திரி ஸ்நானம் என்றும் பக்தர்களாலும் துறவிகளாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
கும்பமேளா தோன்றிய கதை
புராண கதையின் படி அமிர்தத்தை பெறும் முயற்சியில் பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை அசுரர்களிடமிருந்து கைப்பற்ற மஹா விஷ்ணு மோகினி வடிவம் எடுத்தார். அமிர்தத்தை தேவர்களிடம் சேர்க்க முயன்ற போது அமிர்தத்தின் பல துளிகள் பிரயாக்ராஜ், ஹரித்துவார், உஜ்ஜயின், நாசிக் போன்ற இடங்களில் சிதறி விழுந்தன. அதன் காரணமாக அந்த நான்கு இடங்களும் புனித ஸ்தலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் புனித நீராடுவதால் மோட்சம் கிடைக்கும் என்றும் பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.
பல்வேறு நிகழ்ச்சிகள்
கும்ப மேளா அன்று அகாராஸ் பாரம்பரிய ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். ஊர்வலத்தின் போது யானைகள், குதிரைகள், தேர்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இந்நிகழ்வின் போது நாக சாதுக்கள் கலந்து கொண்டு பல மத சடங்குகளை பின்பற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description