dark_mode
Image
  • Sunday, 09 March 2025

"இன்னும் தேர்தல் வரவில்லை… அதற்குள் அடுத்த முதல்வர் என்கிறார்கள்! விஜய்யை விமர்சித்த திருமாவளவன்!"

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், விஜய்யின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்துவிட்டு, பணத்தை தேடி, சுகத்தை தேடி, சொத்தைச் சேர்த்து, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக வாழ்ந்து, சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள். அவர்கள் உடனே கட்சி தொடங்கலாம், ஆட்சி அதிகாரத்தையும் பெறலாம். ஆனால், நான் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்க்கையை முழுமையாகத் துறந்து, தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல், சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல், எனது இளமை முழுவதையும் இழந்துதான் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது" என்று தெரிவித்தார். 

 

மேலும், "தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுகவை தாண்டி முற்போக்கு ஜனநாயக சக்திகள், சமூகநீதி அரசியல் பேசும் கட்சிகள், கருத்தியல் சார்ந்து மக்களை அமைப்பாக்கி அணிதிரட்டக் கூடிய கட்சிகள், விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கின்றன. அதனால் வெறும் சினிமா புகழை மட்டுமே மூலாதாரமாக கொண்டு எல்லாவற்றையும் ஓரம்கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விவரமானவர்கள். இளைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவ்வளவு எளிதாக தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரை ஏய்த்துவிட முடியாது, ஏமாற்றிவிட முடியாது" என்றும் திருமாவளவன் கூறினார். 

 

இவ்வாறு திருமாவளவன் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை விமர்சித்த நிலையில், விஜய் இதற்கு என்ன பதில் அளிப்பார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

comment / reply_from

related_post