வைகோ மருத்துவமனையில் அனுமதி: மீண்டும் என்ன ஆச்சு?

மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று வீட்டில் தவறி கீழே விழுந்து அடிபட்டதாக கூறப்படும் நிலையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கீழே விழுந்ததில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டதாகவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் வைகோ திருநெல்வேலி சென்றிருந்த போது அவர் தங்கியிருந்த வீட்டில் படிகளின் வழியே ஏறாமல் அருகில் இருந்த திண்ணை வழியே ஏற முயன்று தடுமாறி கிழே விழுந்தார். இதனால் இடது தோள் பட்டையில் காயம் ஏறப்ட்டதோடு எலும்பு முறிவும் ஏற்பட்டது. முதற்கட்ட சிகிச்சையை நெல்லையில் மேற்கொண்ட அவர் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர் சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு உடனடியாக பொது வாழ்வில் கவனம் செலுத்தினார். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் நலன் காக்கும் வகையில் தொடர்ந்து முழங்கி வருகிறார். மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக காத்திரமான விமர்சனங்களை மத்திய அரசை நோக்கி முன்வைத்தார். திமுக கூட்டணியில் அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காவிட்டாலும் திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறிவருகிறார். இந்த சூழலில் அவர் மீண்டும் தவறி கீழே விழுந்ததாகவும், அவரது கை விரல்களில் அடிபட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வைகோவின் உடல்நிலை குறித்து அவரது தரப்பில் இருந்தும், மருத்துவமனை தரப்பில் இருந்தும் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.