
விருப்ப மனு அளித்தவர்களிடம் கமல்ஹாசன் 2-வது நாளாக நேர்காணல்: 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை
சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 2-வது நாளாக நேர்காணல் நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டன.
விருப்ப மனு
விருப்ப மனுக்களை தாக்கல் செய்த செயற்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையிலான வேட்பாளர் தேர்வுக் குழுவினர் கடந்த 1-ம் தேதி நேர்காணல் நடத்தினர்.
இந்நிலையில், 2-வது நாளாகநேற்றும் நேர்காணல் நடந்தது.
இதையொட்டி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளகட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கமல்ஹாசன் நேற்று பகல் 1 மணி அளவில் வந்தார்.
அவரது தலைமையில் வேட்பாளர் தேர்வுக் குழுவினர் நடத்திய நேர்காணலில், விருப்ப மனு அளித்த பலரும் பங்கேற்றனர்.
100 பேரிடம் நேர்காணல்
விழுப்புரம், வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது.
இதற்கிடையே, பாமகவில் இருந்து விலகி 'அனைத்து மக்கள்அரசியல் கட்சி' என்ற பெயரில் தனி கட்சி நடத்திவரும் ராஜேஸ்வரி பிரியா நேற்று பிற்பகல் 1.30 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிஅமைத்து போட்டியிடுவது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதேபோல, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜசேகரனும் கமல்ஹாசனை நேற்று சந்தித்து பேசினார்.
2 கட்சிகளுடன் கூட்டணி
''அனைத்து மக்கள் அரசியல் கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி ஆகிய 2 கட்சிகளுடனும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது.இந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்'' என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.